Monday 17 November 2014

வாகனங்களில் சிவப்பு, நீல நிற விளக்குகளை யார் பயன்படுத்தலாம்


அரசு வாகனங்களில் சிகப்பு மற்றும் நீல நிற விளக்குகளை யார், யார் பயன்படுத்தலாம் என்ற புதிய உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வவர்மா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

வாகனங்களில் சிவப்பு விளக்குகளை முறைப்படுத்துவதற்காக மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி வாகனங்களில் சிகப்பு, நீலவண்ணங்களில் விளக்குகளை யார்? யார்? பயன்படுத்தலாம் என்பது குறித்து கடந்த மாதம் 27-ந்தேதி போக்குவரத்து ஆணையர் சில பரிந்துரைகளை அளித்துள்ளார். அதனை ஏற்று தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பிக்கிறது. அதன்படி சுழலும் வகையிலான சிவப்பு விளக்குகளை பயன்படுத்தும் அதிகாரம் பெற்றவர்கள்: மாநில கவர்னர், முதல்-அமைச்சர், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி, சட்டசபை சபாநாயகர், அமைச்சர்கள், ஐகோர்ட்டு நீதிபதிகள்.

சுழலும் வகையில் இல்லாமல் சாதாரண வகை சிவப்பு விளக்குகளை பயன்படுத்தும் அதிகாரம் பெற்றவர்கள்: சட்டசபை துணைசபாநாயகர், தலைமைச் செயலாளர், ஆலோசனைக்குழுவின் தலைவர், உறுப்பினர்கள், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர், மாநில சிறுபான்மை ஆணையத்தின் தலைவர், மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர், மாநில சட்ட ஆணையத்தின் தலைவர், மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தின் தலைவர், மாநில தேர்தல் ஆணையர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், ஐகோர்ட்டு அரசுதலைமை வழக்குரைஞர், மாநில திட்ட ஆணையத்தின் துணைத்தலைவர், தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கத்தின் தேர்தல் ஆணையர்.

இதேபோல் காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் தங்களது வாகனங்களில் சுழலும் வகையிலான நீல வண்ணத்தைக் கொண்ட விளக்குகளைப் பொருத்திக் கொள்ளலாம்.

அவர்களின் விவரம் வருமாறு:- போலீஸ் டி.ஜி.பி., கூடுதல் டி.ஜி.பி.க்கள், ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.க்கள், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்கள், மாநகரக்காவல் ஆணையர்கள், கூடுதல் ஆணையர்கள், இணை-ஆணையர்கள், துணை-ஆணையர்கள், கூடுதல்-கண்காணிப்பாளர்கள், துணைக்-கண்காணிப்பாளர்கள், கூடுதல்-துணை ஆணையர்கள், உதவி-ஆணையர்கள் (சட்டம்-ஒழுங்கு) ஆகியோர் அடங்குவார்கள்.

அரசுத்துறைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி ஆணையர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்களின் தலைவர்கள், மாவட்ட நீதிபதிகள், பெருநகர முதன்மை நீதிபதிகள், ஐகோர்ட்டு நீதிமன்றப் பதிவாளர், கூடுதல் ஆட்சியர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், துணை ஆட்சியர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், மாநகராட்சி மேயர்கள், மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர்கள் பணிகாரணமாக சாலை வழியாகச் செல்லும் போது அவர்கள் தடுக்கப்படாமல் இருப்பதற்காக அவர்களுடைய வாகனங்களில் சுழலும் வகையிலான நீலகலர் கொண்ட விளக்குகளைப் பொருத்திக் கொள்ளலாம்.

அவசரக் காலங்களில் செயல்படும் தீயணைப்பு, மீட்புப் பணித்துறை வாகனங்கள், போக்குவரத்துத் துறையின் அமலாக்கப்பிரிவு வாகனங்கள், காவல் துறையின் ரோந்து வாகனங்கள் ஆகியன சிவப்பு, நீலம், வெள்ளை என மூன்று வகையிலான நிறங்களில் எதையும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஆம்புலன்ஸ் வாகனங்களை ஊதா நிறக் கண்ணாடியைக் கொண்ட ஒளிரும் சிவப்பு விளக்குடன் இயக்கலாம்.


மேலும் சினிமா செய்திகளுக்கு

மேலும் புதிய Smartphone செய்திக்கு


No comments:

Post a Comment